மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக; விளவங்கோட்டில் விஜயதாரணியை எதிர்த்து ஜெயசீலன் போட்டி

ஜெயசீலன் - விஜயதாரணி: கோப்புப்படம்
ஜெயசீலன் - விஜயதாரணி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை மார்ச் 14 அன்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்தார்.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் உதகை ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. உதகை, விளவங்கோடு தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த 3 தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடாததால், பலம் பொருந்திய வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி உறுதி என பாஜக கருதியதால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் நிலவியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று (மார்ச் 17) வெளியிட்டார். முந்தைய வேட்பாளர் பட்டியலை போன்றே இந்த பட்டியலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி,

விளவங்கோடு - ஜெயசீலன்

தளி - நாகேஷ்குமார்

உதகமண்டலம் - போஜராஜன்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ விஜயதாரணியும், உதகையில் காங்கிரஸ் சார்பாக அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆர்.கணேஷும், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in