

ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பேசுகிறார். எவ்வளவு ஆணவம் இருந்தால் அவர் இவ்வாறு பேசுவார் என்று முதல்வர் பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி பகுதியில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று (மார்ச் 16) மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பேராவூரணியில் அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தத்துக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
''ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பேசுகிறார். எவ்வளவு ஆணவம் இருந்தால் அவர் இவ்வாறு பேசுவார்? நாமே மன வேதனையோடு இருக்கின்றோம். ஜெயலலிதா மீது கருணாநிதி குடும்பத்தினர், வஞ்சகர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்தி ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமாக இருந்தார்கள். அவர்களைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.
என் மீது வழக்குப் போட்டுப் பாருங்கள் என ஸ்டாலின் சொல்கிறார். நான் உங்கள் மீது வழக்குப் போட மாட்டேன், மேலே இருக்கின்ற கடவுள் உங்களுக்குத் தண்டனை தருவார். ஒரு தலைவர் என்றால் அரசியல் ரீதியாகச் சந்திக்க வேண்டும், குறுக்கு வழியாகச் சந்திக்கக் கூடாது.
அதிமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளோம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்தோம், மீத்தேன் எடுக்க ஸ்டாலினால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதனை நாங்கள் ரத்து செய்தோம்.
விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்தோம். ஹைட்ரோகார்பன் திட்டம் எந்தக் காலத்திலும் டெல்டா பகுதியில் வராது என நாங்கள் சட்ட உத்தரவாதம் அளித்தோம்.
காவிரி உரிமைக்காக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நம்மை விட்டுப் பிரிந்தார். ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு அதனைத் தொடர்ந்து நடத்தி நமக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைப்பதற்கு, நல்ல தீர்ப்பைப் பெற்றுத் தந்தோம். விவசாயிகள் பாதிக்கப்படும்போது அதற்குத் தீர்வு காண மத்திய அரசிடம் குரல் கொடுக்காமல் தன்னுடைய குடும்பத்தினருக்கு இலாகா பெறுவதற்காக முயற்சி செய்தவர்தான் கருணாநிதி.
கல்லணை கால்வாய் சீரமைப்புக்காக 2,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தோம், கடைமடை வரை தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீதம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு. இதுவரை 1500 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் அளித்துள்ளோம். விவசாயிகளுக்கு வறட்சி இடுபொருள் நிவாரணம் அளித்துள்ளோம்; 9,300 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்துள்ளோம்.
விவசாயிகளுக்குக் குறை என்றால் முதல் குரல் கொடுப்பது அதிமுக அரசுதான். கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாயை ரத்து செய்து சாதனை படைத்துள்ளோம். நாங்கள் பயிர்க் கடனை ரத்து செய்து விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்கிய பிறகு ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பயிர்க் கடனை ரத்து செய்வோம் என்று. இது வேடிக்கையாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.