

தேமுதிக, அமமுக கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். தேர்தல் வியூகம், பிரச்சார அம்சங்கள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக மூன்றாவது அணியாகக் களத்தில் நிற்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் பலமாக களத்தில் நிற்கின்றன. மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.
மூன்றாவது அணியில் முந்தப்போவது யார் என இவர்கள் மூவரிடையே போட்டியுள்ளது. ஆரம்பத்தில் அதிமுக அணியில் இருந்த தேமுதிக தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் அதிமுகவுடன் முரண்பட்டது. இரண்டு, மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் தேமுதிக 23 தொகுதிகள் கேட்டது.
ஆனால், அதிமுக தரப்பில் 15 தொகுதிகளுக்கு மேல் ஏறாததால் கூட்டணியை முறித்துக்கொள்வதாக தேமுதிக அறிவித்தது. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்கிப் பேட்டி கொடுத்தன. அமமுக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்த நிலையில், ஒவைசி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அமமுகவுடன் உடன்பாடு கண்டது. 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்திக்க டிடிவி தினகரன் இன்று தேமுதிக அலுவலகத்துக்கு வந்தார்.
அவரை சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் வியூகம், பிரச்சார அம்சங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.