

ஒரு கட்சியைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை என, தேமுதிக விலகல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, தேமுதிக விலகல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தேமுதிகவைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையா? அல்லது முயலவில்லையா?
கட்சியில் எல்லோருக்கும் மரியாதையும் பிரதிநிதித்துவமும் இருக்கிறது. பாஜக, பாமகவுடன் உடன்பாடு எட்டப்பட்டது. சிறிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டது. தேமுதிகவுடனும் மனம் கோணாதபடி, மனக்கசப்புக்கு ஆளாகாதபடி பேச்சுவார்த்தை நடத்தினோம். கட்சியின் பலத்தின் அடிப்படையில்தான் நாம் தொகுதிகளை ஒதுக்க முடியும். எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், அதற்கான வாக்கு வங்கி இருக்கிறதா? ஒரு கட்சியைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எதற்கு மனக் கஷ்டம்? நம் பலத்தைத் தெரிந்துகொண்டு கூட்டணி சேர்வதுதான் அவர்களுக்கும் பலமாக இருக்கும். அவர்கள் விலகிப்போனது அவர்களுக்குத்தான் பலவீனமான விஷயம். அரசியலில் அவர்களுக்குப் பின்னடைவு. அவர்களின் துரதிர்ஷ்டம்.
ஜெயலலிதா எங்களை நல்லவிதமாக நடத்தினார். முதல்வர் பழனிசாமிக்குப் பக்குவம் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளாரே?
அளவுகோல் ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபடும். பக்குவமாகத்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் அந்த நிலையைத் தாண்டிவிட்டார்கள். அப்போது, யார் பக்குவப்பட்டவர்கள், பக்குவப்படாதவர்கள் என்பதை நான் பொதுவாக விட்டுவிடுகிறேன்.
எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதைக் கூறாமலேயே உடன்பாட்டில் கையெழுத்திடச் சொன்னதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்களே?
உள் அறையில் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்வது ஆரோக்கியமான செயல் அல்ல. நாங்கள் சொல்வதை ஏற்க முடிந்தால் கையெழுத்திடட்டும். இல்லையென்றால் நண்பர்கள் என 'குட் பை' சொல்லிப் பிரியலாம்.
தேமுதிக விலகல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதா?
ஒரு பாதிப்பும் இல்லை. முதல்வரும் அதைத்தான் சொன்னார். எங்களுக்கு வாக்குகள் வரும். கூட்டணி பலமாக இருக்கிறது. மக்களுக்கு நிறைய செய்திருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.