

அரசியல் கூட்டங்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை என்றும், கரோனாவுக்குப் பாகுபாடு தெரியாது என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''19 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதில் தமிழகமும் ஒன்று. நாம் கடந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைப் பார்த்திருக்கிறோம். இருந்தபோதும் இரண்டு வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு 450 என்ற நிலையில் தற்போது 1000 பேருக்குத் தொற்று ஏற்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இதற்கு மக்களின் தொய்வே முக்கியக் காரணம்.
முகக்கவசம் அணியாவிட்டாலும் கரோனா வராது என்ற அலட்சியம் மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று மக்கள் நினைக்கின்றனர்.
திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் அதிகக் கூட்டம் கூடுகிறது. அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால் தொற்று இன்னும் அதிகரிக்கலாம்.
கரோனாவுக்குப் பாகுபாடு தெரியாது. குழந்தை, இளைஞர்கள், முதியோர்கள் என யாராக இருந்தாலும் முகக்கவசம் அணியாமல், கை கழுவாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் நிச்சயம் தொற்று பரவும்.
அரசியல் கூட்டங்களுக்காக பிரத்யேக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்றில்லை, எல்லாக் கூட்டங்களுக்கும் மூடிய அறைக்குள் 600 பேர்தான் இருக்க வேண்டும். திறந்த இடம் என்றால் இடத்தின் பரப்பளவில் 50 விழுக்காடு மக்கள்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அதைக் கவனித்துக் கொள்வர்.
அரசியல் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.