Published : 17 Mar 2021 11:36 AM
Last Updated : 17 Mar 2021 11:36 AM

அதிமுகவினர் ஹெலிகாப்டர் கொடுப்பதாகக் கூட சொல்வார்கள்: ஸ்டாலின் பேச்சு

தேர்தல் களத்தில் திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கிறார்கள் அதிமுகவினர். 2016-ல் அனைவருக்கும் செல்போன் என்று அறிவித்தார்களே கொடுத்தார்களா? போகிறபோக்கில் அனைவருக்கும் ஹெலிகாப்டர் தருகிறோம் என்றுகூட சொல்வார்கள் என ஸ்டாலின் பேசினார்.

சேலம் வீரபாண்டி, கஜல்நாயக்கன்பட்டியில் பொதுமக்களிடையே நேற்று ஸ்டாலின் பேசியதாவது:

''தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட்டிருக்கிறோம். முன்னர் தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, ப.சிதம்பரம் ‘இந்தத் தேர்தல் களத்தில் கதாநாயகன் தேர்தல் அறிக்கைதான்’ என்று சொன்னார். அதேபோல இன்றைக்கு நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து கதாநாயகன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் நம் தேர்தல் அறிக்கைதான்.

அவர்களும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வில்லன் என்று சொல்லலாம். அதுவும் ஆக்ரோஷமான வில்லனல்ல; காமெடி வில்லன். அவர்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். பெண்களுக்கு 1500 ரூபாய் இலவசமாகக் கொடுக்கப் போகிறார்கள். நாம் கடந்த ஏழாம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மாதம் தோறும் குடும்பத் தலைவியருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தோம். உடனே ஆயிரத்து 500 என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

நம் தேர்தல் அறிக்கையையும் அவர்களது தேர்தல் அறிக்கையையும் எடுத்துப் பாருங்கள். நம் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. ரேஷன் கார்டு இருக்கின்ற அத்தனை பேருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இதை அறிவித்தார்கள். இதுவரையில் யாருக்காவது செல்போன் அரசின் சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறதா? இப்போது அதைத் திரும்ப அறிவித்திருக்கிறார்கள்.

இதேபோல நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலில் அறிவித்தார்கள். நீட் தேர்வு வந்ததற்குக் காரணமே இவர்கள்தான். அனிதாவை இழந்தோம். தமிழகத்தில் பல மாணவர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டபோது அதைத் தமிழ்நாட்டுக்குள் வர விடாமல் தடுத்த தலைவர்தான் நம்முடைய தலைவர். அதை மறந்து விடாதீர்கள். அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில் கூட அது தடுக்கப்பட்டு இருந்தது. அது உண்மைதான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மறுக்கவில்லை.

ஆனால், பழனிசாமி இன்றைக்கு முதல்வராக வந்ததற்கு பிறகு, அது சுலபமாக நுழைந்திருக்கிறது என்றால் என்ன காரணம்? அஞ்சி, நடுங்கி, மத்திய அரசிற்கு பயந்து கொள்ளை அடித்த விவகாரங்கள் எல்லாம் மத்திய அரசின் கையில் இருக்கிறது. எனவே அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு கைகட்டி, வாய் பொத்தி அடிமையாக அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த லட்சணத்தில் 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உறுதிமொழி கொடுத்தார்கள். இப்போது இந்தத் தேர்தலில் உறுதிமொழி கொடுக்கிறார்கள். சட்டப்பேரவையில் 2 முறை மசோதாக்கள் தாக்கல் செய்து, அதை நாம் மத்திய அரசிற்கு திமுகவின் ஆதரவோடு, திமுக முயற்சி எடுத்து அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், டெல்லி அதைச் சீர்தூக்கிப் பார்க்கவில்லை. ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

அது மட்டுமல்ல; கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற ஒரு அறிவிப்பை அறிவித்திருக்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்றால் பாருங்கள். ஹெலிகாப்டர் ஒன்று கொடுக்கப் போகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் விமானம் கொடுக்கப் போகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்குச் சென்றுவிட்டார்கள்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x