

திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடம் நன்கு ஆதரவு இருக்கிறது என்று திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக எஸ்.கே.பொன்னுத்தாய் (46) அறிவிக்கப்பட் டுள்ளார். இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
இவரது கணவர் கருணாநிதி. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மகன் ராகுல்ஜி, இந்திய மாணவர் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவராக உள்ளார். இவருக்கு இலக்கியா என்ற மகளும் உள்ளார். பொன்னுத்தாய் குடும்பத்துடன் சமய நல்லூரில் வசித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து பொன்னுத்தாய் களம் காண்கிறார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பொன்னுத்தாய் அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். திமுக கூட்டணிக்கு மக்களிடம் நன்கு ஆதரவு இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அரிவாள் சுத்தியல் சின்னம் வெற்றி பெறும் என்பதை உணர்கிறேன்.
கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் இம்முறை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக நான் சட்டப்பேரவைக்குச் சென்று திருப்பரங்குன்றம் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
மேலும், கலைக்கல்லூரி இப்பகுதியில் தொடங்குவதற்குக் குரல் கொடுப்பேன். விவசாயம் பொய்த்துப்போன சூழலில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தவும் குரல் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.