

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தியே மேலூர் தொகுதியைக் கேட்டுப் பெற்று, அவர் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட வடக்கு தொகுதியையே மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக இருந்தது. அதனால், பாஜகவும், அதிமுகவிடம் மல்லுக்கட்டி வடக்கு தொகுதியை கேட்டு பெற்றது. ஆனால், எதிர்பாராத விதமாக ராகுல்காந்தியே ஸ்டாலினிடம் நேரடியாக பேசி மேலூர் தொகுதியை பெற்றார். மேலும், அவர் பரிந்துரை செய்த ஆலாத்தூர் டி.ரவிச்சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் நெருங்கிய உறவினர். மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டதாலேயே ராகுல்காந்தி இந்தத் தொகுதியை ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது சீட் கிடைக்காத காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலை பார்க்கத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே வேட்பாளர் தரப்பில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது.
மேலும், இதுதொடர்பாக வேட்பாளர் தரப்பில் இருந்து, தேர்தல் பணிகளில் ஒத்துழைக்க மறுக்கும் நிர்வாகிகள் குறித்து புகார் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே காங்கிரஸாரின் கோஷ்டி பூசலை அறிந்த திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர்.