

எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ஜான் பாண்டியனுக்கு, அந்த கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால் சிக்கல் நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சியின் தலைவர் பெ.ஜான் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு இதே எழும்பூர் தொகுதியில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிட்டு சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் எழும்பூரில் போட்டியிடுகிறார். அதன்படி ஜான் பாண்டியன் கடந்த மார்ச் 15-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதேநேரம் அதிமுக நிர்வாகிகள் பெரியளவில் ஒத்துழைப்பு வழங்காததால் ஜான் பாண்டியன் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
அதிமுக வாக்குறுதி
இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கூறும்போது, ‘‘கூட்டணி பேச்சுவார்த்தையின்போது முதலில் நிலக்கோட்டை தொகுதிதான் கேட்கப்பட்டது. அதிமுக தலைமைதான் எழும்பூரில் நிற்க சொல்லி தேவையான உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது பிரச்சாரம் உட்பட தேர்தல் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை’’என்றனர்.
இதற்கிடையே, வடசென்னை தெற்கு (மேற்கு) அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா எழும்பூர், துறைமுகம் தொகுதிகளின் பொறுப்பாளராக இருக்கிறார். அவர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் பாலகங்காவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் எழும்பூர், துறைமுகம் தொகுதிகளின் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிவருவதாகவும் தெரியவருகிறது.
ஏற்கெனவே எழும்பூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று அதிமுகவினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.