

நாம் பேசுவது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி விடுவதால், வேட்பாளர்களாக இருப்பவர்கள் குறைவாகவே பேச வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவுரை வழங்கினார்.
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வி.என்.நகரில் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசியதாவது:
வேட்பாளர்களாக இருப்பவர்கள் வாக்காளர்களைப் பார்த்து 'எங்களுக்கு ஓட்டுப் போடுங்க' என மட்டும் பேசுங்கள். வேறு ஏதாவது பேசினால், அது சில நேரங்களில் தப்பாகிவிடுகிறது. நாம் எதையாவது சொல்லி, அதை சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாலும், டிவியில் ஒளிபரப்பாவதாலும் சில நேரங்களில் சர்ச்சையாகிவிடுகிறது.
வேட்பாளர்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்கியவராக இருந்தாலும், இந்தக் களம் அவர்களுக்கானது அல்ல. எங்களைப் போன்ற படிக்காதவர்களுக்கானது. எனவே வேட்பாளராக இருப்பவர்கள் கொஞ்சம் குறைவாக பேச வேண்டும். நிறைவாக சேவை செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்கள் மூலம் பலம் சேர்த்தவர்
கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார். ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி கிறிஸ்தவர்கள் மூலம் திமுகவுக்கு வலுவூட்டியவர் என்பதால், இவரை நல்ல இடத்தில் அமர வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விரும்பினார். சொந்த ஊர் என்பதால் அவர் திருச்சியைக் கேட்டு வாங்கி வந்துள்ளார்.
ஆனால், இவர் இங்கு வந்ததற்கு நான்தான் காரணம் என நினைத்து எல்லோரும் என்னைத் திட்டுகின்றனர். வேறு வழியில்லை என்பதால், நானும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். அனைவரும் இணைந்து இவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் சீட் கிடைக்காமல் அதிருப்தியிலுள்ள திமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தவே கே.என்.நேரு இவ்வாறு பேசியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.