Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

ஒரே நாளில் ரூ.22.53 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

தமிழகத்தில் தேர்தல் தொடர்பான சோதனையில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.22 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

கடந்த பிப்.26-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து தொகுதிகளிலும் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனைச்சாவடிகள் அமைத்து கண் காணிப்பை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், கடந்த மார்ச் 14-ம் தேதி வரை ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை என, ரூ.111 கோடியே 20 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலானவற்றை கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியிருப்பதாவது:

தேர்தல் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர், காவல்துறையினர் இணைந்து மார்ச் 15-ம் தேதி வரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.35 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்தையும், வருமானவரித் துறையினர் ரூ.15 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

1.31 கோடி மதுபானம்

மேலும், ரூ.1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம், ரூ.35 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.65 கோடியே 60 லட்சத்து 94 ஆயிரம்மதிப்புள்ள தங்கம், ரூ.1 கோடியே 17 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இதர உலோகப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதுதவிர, சேலைகள், துணி வகைகள், இதர பொருட்கள், வெளிநாட்டு கரன்சி என ரூ.14 கோடியே 7 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் சேர்த்து மார்ச் 15-ம் தேதிவரை ரூ.133 கோடி 74 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதில், நேற்று முன்தினம் மட்டும், ரூ.12 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள சேலை, துணி வகைகள் உள்ளிட்ட பொருட்கள், ரூ.6 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.22 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x