

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நள்ளிரவில் வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்ற முயன்ற போலீஸார் மீது இளைஞர்கள் கல் வீசி தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள எம்.வள்ளாலபட்டி புதூரில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஊருக்கு நடுவே 5 அடி உயர தேவர் சிலையை நேற்று முன்தினம் நள்ளிரவு வைத்தனர்.
இச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதை அறிந்த மேலூர் துணை வட்டாட்சியர் மணிகண்டன், மேலூர் டிஎஸ்பி ரகுபதி ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, சிலை வைத்தது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தேர்தல் முடிந்த பிறகு சிலையை வைக்கலாம். அதை நீங்களே எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து காவல், வருவாய்த் துறையினர் சிலையை எடுத்து மேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதனால் கூடுதல் எஸ்.பி. வனிதா தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் சிலையை அகற்ற முயன்றபோது, அப்பகுதி இளைஞர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திடீரென ஊரில் மின்சாரத்தை துண்டித்தனர். இருளில்அவர்கள் கற்களை எடுத்து போலீஸார் மீது வீசினர். இதனால் போலீஸார் திணறினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108ஆம்புலன்ஸ், காவல் துறை வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
கல் வீச்சில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி விஜயகுமார், கொட்டாம்பட்டி எஸ்.ஐ.கள் சுதன், பழனியப்பன், 3 காவலர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகன ஓட்டுநர்கள் என7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டிஐஜி சுதாகர் ஆய்வு செய்தனர்.
கொட்டாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் புகாரின்பேரில் பெண்கள் உட்பட 32-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர்சிலை அகற்றப்பட்டு மேலூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.