Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

பிஐஎஸ் தரச் சான்று பெற்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் புகார் அளிக்கலாம்: இந்திய தர நிர்ணயக் கழகம் தகவல்

மத்திய அரசின் இந்திய தர நிர்ணயக்கழகத்தின் தென்மண்டல அலுவலகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள் நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணையவழி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய இந்திய தர நிர்ணயக் கழக தென்மண்டல அலுவலகத்தின் துணை இயக்கநர் ஜென்ரல் எம்.வி.எஸ்.டி. பிரசாத ராவ் கூறியதாவது:

பொதுமக்களின் நுகர்வோர் நலனுக்காக இந்திய தர நிர்ணயக் கழகமும் (பிஐஎஸ்), நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான், குடிநீர் முதல் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வரை அனைத்தும் தரமாக பெற முடியும்.

பிஐஎஸ் தரச் சான்றுதான், நுகர்வோர்கள் பொருட்களை தரத்துடனும்,பாதுகாப்புடனும், நம்பகத் தன்மையுடனும் பெற உதவுகிறது. அதேபோல், பிஐஎஸ் தர பொருட்கள், சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, பிஐஎஸ் தர உரிமத்தை தவறாக பயன்படுத்தினாலோ அது குறித்து பொதுமக்களும் நுகர்வோரும் எங்களது கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதேபோல், பிஐஎஸ் தரச்சான்று பெற்ற பொருட்களின் தரம் சரி இல்லை என வாடிக்கையாளர்கள் நினைத்தால், அருகில் உள்ள எங்களது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார்தெரிவிக்கலாம். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட பொருள் மாற்றி தரவோ அல்லது பழுதுபார்த்து தரவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.

கருத்தரங்கில் பேசிய தர நிர்ணயக் கழகத்தின் விஞ்ஞானி ஜெஸ்ஸி பென்னி, "பொதுவான நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்களுக்கும் இந்திய தர நிர்ணயக் கழகத்துக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும்" என்றார்.

இந்திய தர நிர்ணயக் கழகத்தின் துணை இயக்குநர் அஜய் கண்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x