Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

ரூ.12.90 கோடி மதிப்பில் சீரமைப்பு சேலம் அண்ணா பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு: விளையாட்டுச் சாதன கட்டணங்களை குறைக்க வலியுறுத்தல்

சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 70 அடி அகலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடும் லேசர் வண்ண விளக்கு நீரூற்று.

சேலம்

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் சேலம் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டு நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில், விளையாட்டுச் சாதனங்களின் கட்டணங்களை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் நீர் விளையாட்டுகள், வண்ண வண்ண ஒளி விளக்குகளில் நீர் நடனம். குளிர்ந்த நிலையில் (–5 டிகிரி) சறுக்கி விளையாடும், ‘பனி உலகம்’ மற்றும் குடும்பத்துடன் அருவியில் குளிக்கும் வகையில் 30 அடி உயர செயற்கை அருவி, குதிரை அமைப்புக்கொண்ட மெர்ரி-கோ-ரவுண்ட் எனப்படும் தரைமட்ட ராட்டினம், கேப்ஸ்யூல் எனப்படும் தரைமட்ட வட்ட ராட்டினம், ஸ்விங்-சேர் எனப்படும் கயிறு ராட்டினம், சிறுவர்களுக்கான செயற்கை மோட்டார் வாகனம் மற்றும் செயற்கை ரயில் ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், 70 அடி அகலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடும் லேசர் வண்ண விளக்கு நீரூற்று, தண்ணீரில் நனைந்து விளையாடும் செயற்கை மழை நடன மேடை, 200 பேர் அமரும் திறந்தவெளி எல்இடி திரையரங்கம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

பூங்காவில் இடம் பெற்றுள்ள விளையாட்டுச் சாதனங்களுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்துடன் கூடுதலாக ஜிஎஸ்டி வரி குறைந்தபட்சம் ரூ.9 முதல் அதிகபட்சம் ரூ.36 வரை வசூலிக்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப் படுகிறது. விளையாட்டுச் சாதனங்களுக்கு கட்டணம் அதிகம் என்பதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

எனவே, ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டணங்களை குறைக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x