Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவை சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னை காவல் துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுக்க, பறக்கும் படையினருடன் இணைந்து காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமமறைவாக உள்ள ரவுடிகளை தனிப்படை போலீஸார் கைது செய்து வருகின்றனர். அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து அவை திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை 1,792 துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் 18 துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படாமல் உள்ளன. அதுவும் விரைவில் திரும்பப் பெறப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 24 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

கடந்த சட்டப்பேரவை தேர்தலைவிட சுமார் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இந்த முறை அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 11,852 வாக்குச்சாவடிகள் சென்னை காவல் எல்லையில் உள்ளன. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் போலீஸாருடன் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் (ஸ்ட்டாங் ரூம்) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தலைமறைவாக உள்ள ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக இதுவரை 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x