

கோயம்பேடு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில், துணை ராணுவப் படையினருடன் இணைந்து போலீஸார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களான பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொதுமக்கள் அச்ச உணர்வை அகற்றும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள், போலீஸார் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு, சிஎம்பிடி மற்றும் மதுரவாயல் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் அண்ணா நகர் காவல்துணை ஆணையர் ஜி.ஜவஹர் தலைமையில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், போலீஸாருடன் துணை ராணுவப் படை வீரர்களும் கலந்து கொண்டனர். இதேபோல, பள்ளிக்கரணையிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.