

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரைச் சேர்ந்தவர் நெடுமாறன்(68). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தார்.
அதில், ‘தேனாம்பேட்டையை சேர்ந்த அம்ரிஷ்(33) என்பவர் அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி ஒரு கலசத்தை என்னிடம் விற்பனை செய்தார்.
இதற்காக ரூ.26.20 கோடியை என்னிடம் இருந்து அவர் வாங்கினார். ஆனால், அவர் கொடுத்தது இரிடியமே இல்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அம்ரிஷை தேடி வந்தனர்.
இந்நிலையில், அம்ரிஷ் தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பென்னி தெருவில் உள்ள வீட்டுக்கு நேற்று வந்திருந்தார்.
இதையறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அம்ரிஷ், பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பதும், இசையமைப்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.