

தெருக்கூத்து பாடகர் கோவனை 5 நாள் காவலில் வைத்து விசா ரிக்க அனுமதி கேட்டு நீதிமன் றத்தில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்த தெருக்கூத்து பாடகர் கோவன், மதுவுக்கு எதிராக பாடல் எழுதி, தெருக்களில் பாடி வந்தார். இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், கடந்த 30-ம் தேதி அதிகாலையில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவனை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி எஸ்.கணேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கோவனை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம் கோவன் கூறும்போது, ‘‘என்னை போலீஸார் ஏற்கெனவே விசா ரித்துவிட்டனர். இப்போது துன்புறுத்துவதற்காகவே 5 நாள் கஸ்டடி கேட்கின்றனர். என்னை போலீஸ் விசாரணைக்கு அனுப்பக் கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி இன்று (5-ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.