

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 16-ம் தேதி கொடியேற்றப்பட்டது. அன்று டவீதியுலா ஆரம்பமானது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது. மகா தேரோட்டம் 22-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணியளவில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதையடுத்து தெப்பல் உற்சவம் நடைபெற்றது. அய்யங்குளத்தில் சந்திரசேகரர், பராசக்தி அம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகர் தெப்பல் உற்சவம் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது. இதற்கிடையில் உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் கிரிவலம் நடைபெற்றது. இதையடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நேற்று நிறைவடைந்தது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு காட்சி கொடுக்கும். பின்னர் மலை மீது உள்ள கொப்பரை, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்புப் பூஜை நடத்தப்படும். அதன்பிறகு, கொப்பரையில் இருந்து தீப மை சேகரிக்கப்பட்டு, அத்துடன் வாசனைத் திரவியங்களை சேர்ந்து ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு வழிபாடு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாத மை வழங்கப்படும்.