Last Updated : 17 Mar, 2021 03:16 AM

Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

போலீஸார், அதிகாரிகளை அவதூறாக பேசும் பழைய வீடியோக்களால் குமரியில் திமுக-காங்கிரஸ் அணியினர் கலக்கம்: தேர்தல் வேளையில் சமூக வலைதளங்களில் வைரல்

கோப்புப்படம்

நாகர்கோவில்

போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளை, திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவதூறாக பேசும் பழைய வீடியோக்கள், தேர்தல் நேரத்தில் சமூக வலை தளங்களில் மீண்டும் வைரலாகி வருவது, திமுக மற்றும் காங்கிரஸ் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களே இல்லை. நடப்பு தேர்தலிலும் குமரியில் 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக களம் காண்கிறது. மற்ற 4 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள வேளையில், கடந்த சில நாட்களாக சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான பழைய வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சில ஆண்டுகளுக்கு முன் அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸாரை அவதூறாக பேசுவது போன்ற இந்த வீடியோக்கள், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு போன்று சமூக வலை தளங்களில் தேர்தல் நேரத்தில் மீண்டும் பரப்பப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் இரு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவினர் நடத்திய போராட்டத்தின்போது, போக்குவரத்தை சீரமைத்த காவல் உதவி ஆய்வாளர், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வைப் பார்த்து அவதூறாக பேச, ஆவேசமடைந்த எம்.எல்.ஏ. அதே வார்த்தையால் எஸ்.ஐ.யை பார்த்து திருப்பி ஆவேசமாக பேசும் வீடியோ மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் சுரேஷ்ராஜன் போட்டியிடும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபோல், குமரி மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தபோது, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஆனபோது, அது குறித்து பேசுவதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார் ஆகியோர், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அந்நேரத்தில் கூட்டுறவு இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா இருக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை எனக்கூறி, எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமாக பேசுவதும், 6 எம்.எல்.ஏ.க்கள் வந்தபோதும் மரியாதை கொடுக்க வில்லை என இணைப்பதிவாளரை பார்த்து ஒருமையில் பேசும் வீடியோ காட்சிகளும் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதுபோன்று, எம்.எல்.ஏ.க்கள் குறித்த பழைய ஆடியோ, வீடியோ உரையாடல்கள் மீண்டும் தூசுதட்டப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர், இந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக பேசும் வீடியோக்களும், வாக்குறுதி களும் சமூக வலை தளங்களி்ல அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால், தற்போது தேர்தலில் போட்டியிடும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x