

‘‘டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் அத்தொகுதியை விட்டுஓடி வர வேண்டிய அவசியம் என்ன?’’ என்றுஅமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு கழுகுமலை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் சக்தி மிக்க தலைவராக இருந்தவர். காலத்தின் அருமை கருதி ஹெலிபேட் அமைத்து, ஹெலிகாப்டரில் வந்துபிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால்,ஸ்டாலின் ராக்கெட்டில் வந்தால் கூடமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் ஆர்.கே.நகரைவிட்டு ஓடி வர வேண்டிய அவசியம் என்ன?3 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். ஆர்.கே.நகர் பக்கம் அவர் திரும்பச் செல்ல முடியாது. ஏனென்றால், 20 ரூபாய் நோட்டு என்ன பாடுபடுத்தியது என்று அனைவருக்கும் தெரியும்.
அவர் பெரியகுளம் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து மேலவை உறுப்பினர்களின் தொகுதி நிதியை வாங்கி, அவரது தொகுதிக்கு செலவு செய்தார். அவரது வீட்டுக்குஅமைச்சர்கள் சென்றால் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டும். அமைச்சர்களுக்கே இந்த நிலை என்னும் போது, கோவில்பட்டி தொகுதி மக்கள் இதை நினைத்து பார்த்தால், அவருக்கு டெபாசிட்டே கிடைக்காது.
மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறேன். ஆனால், அவரோ ஒருவரை குறிப்பிட்டு அவரை நம்பி சந்திக்கிறேன் என்கிறார். வெற்றி பெற்ற பின்னர் தினகரன் சென்னைக்கு சென்று விடுவாராம். அவரால் குறிப்பிடப்படும் ஒருவர் இங்கு பணிகளை கவனிப்பாராம். சட்டப்பேரவைஉறுப்பினருக்கு மாற்று பதவி அறிவித்தது இந்தியாவிலேயே தினகரன் ஒருவர் தான். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? இதற்கு தினகரன் ஏன் போட்டியிட வேண்டும் என்றார்.