

நாட்றாம்பள்ளியில் வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்புப்போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அண்ணா தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனைப் பட்டா கேட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் கருப்புக்கொடி ஏற்றி, அப்பகுதியில் பந்தல் அமைத்து தேர்தல் புறக் கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘நாட்றாம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெருவில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நாங்கள் இப்பகுதியில் கடந்த 80 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.
எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. வேலூர் மாவட்டத்துடன் நாட்றாம் பள்ளி இருந்த போதிலிருந்தே வீட்டு மனைப் பட்டா கேட்டு பல முறை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள் ளோம்.
கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதும் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மக்கள் குறைதீர்வுக்கூட்டம், கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வீட்டு மனை கேட்டு கிராம மக்கள் சார்பில் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற்ற உடன் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளிக் கின்றனர்.
ஆனால், தேர்தல் முடிந்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் அரசியல் கட்சியினர் எடுப்பதில்லை. இதே நிலை நீடித்து வருவதால், இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் ஒரு மனதுடன் முடிவு எடுத்துள்ளோம்.
அதன்படி, இன்று (நேற்று) ஒவ்வொரு வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மட்டும் அல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களையும் நாங்கள் புறக்கணிப்போம், தேவைப்பட்டால் அரசு வழங்கிய அடையாள அட்டைகளையும் திரும்ப வழங்க தயங்க மாட்டோம்’’ என்றனர்.
பொதுமக்களின் கருப்புக்கொடி மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாட்றாம்பள்ளி காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அண்ணா தெருவுக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதை ஏற்காத பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.