

புதுச்சேரியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 14க்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடவில்லை. ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. சிபிஎம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் இன்று இரவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம் பெறவில்லை. இதனால், அவர் போட்டியிடாதது உறுதியானது.
வேட்பாளர்கள் விவரம்:
ஊசுடு- கார்த்திகேயன், கதிர்காமம்- செல்வநாதன், இந்திராநகர்- கண்ணன், காமராஜ் நகர்- முன்னாள் அமைச்சர் ஷாஜகான், லாஸ்பேட்- வைத்தியநாதன், முத்தியால்பேட்டை- செந்தில்குமரன், அரியாங்குப்பம்- ஜெயமூர்த்தி, மணவெளி- அனந்தராமன், ஏம்பலம்- முன்னாள் அமைச்சர் கந்தசாமி, நெட்டப்பாக்கம்- விஜயவேணி, நெடுங்காடு- மாரிமுத்து, திருநள்ளாறு- கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு- மாநிலத்தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், மாஹே- ரமேஷ் பிரேம்பாத்.
இதில் ஏனாம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அத்தொகுதியில் இருந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் என்.ஆர்.காங்கிரஸுக்கு மாறிவிட்டார்.
அத்தொகுதிக்கு மட்டும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஎம்க்கு தொகுதியில்லை
அதேபோல் இக்கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதனால் சிபிஎம் 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாஹேயில் சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.