அமைச்சர் ஜி.பாஸ்கரனை சமரசப்படுத்திய முதல்வர் பழனிசாமி: வேட்பாளர் செந்தில்நாதனுக்கு பிரச்சாரம் செய்ய முடிவு

சிவகங்கையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுடன் நிற்கும் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகனும், ஒன்றியச் செயலாளருமான கருணாகரன்.
சிவகங்கையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுடன் நிற்கும் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகனும், ஒன்றியச் செயலாளருமான கருணாகரன்.
Updated on
1 min read

சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஜி.பாஸ்கரனை முதல்வர் பழனிசாமி சமரசப்படுத்தியதை அடுத்து சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு பிரச்சாரம் செய்ய அமைச்சர் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் தனக்குத் தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓராண்டிற்கு முன்பே அமைச்சர் ஜி.பாஸ்கரன் தேர்தல் பணிகளை தொடங்கினார்.

ஆனால் அவருக்கு திடீரென சீட் மறுக்கப்பட்டு, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்டதோடு தீக்குளிக்கவும் முயன்றனர்.

மேலும் மார்ச் 12-ம் தேதி சிவகங்கை வந்த அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை அமைச்சர் ஆதரவாளர்கள் வரவேற்க வரவில்லை. மேலும் சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் அமைச்சர் மகன் கருணாகரனும் வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனை சேலத்திற்கு வரவழைத்து முதல்வர் பழனிசாமி சமரசப்படுத்தினார். மேலும் தேர்தல் முடிந்ததும் கட்சியில் முக்கிய பதவி வழங்குவதாக உறுதியளித்தார்.

இதனால் சமரசமடைந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும், சிவகங்கையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மகனும், ஒன்றியச் செயலாளருமான கருணாகரன் பங்கேற்றுப் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in