

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவராக இருந்த தர்ம. தங்கவேல் அக்கட்சியிலிருந்து விலகி 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். தற்போது, இவர் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அதிமுகவை சேர்ந்த சிலர் ஆலங்குடி, கீரமங்கலம் போன்ற இடங்களில் கடந்த 2 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த அதிமுகவினரை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு இன்று (மார்ச் 16) அதிகாலை நேரில் வரவழைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமாதானம் செய்தார்.
இந்நிலையில், அறந்தாங்கியில் நேற்று (மார்ச் 15) தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு ஆலங்குடி தொகுதி வேட்பாளர் தர்ம.தங்கவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புளிச்சங்காடு கைகாட்டி நோக்கி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கையை தெரிவிப்பதற்காக பனங்குளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு இருந்தனர். இங்கு, முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
எனினும், தமிழக முதல்வர் அந்த இடத்தில் நிற்கவில்லை. இதைக் கண்டித்தும், அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அதே இடத்தில் கொத்தமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் தி பாண்டியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர், கீரமங்கலம் போலீஸார் சமாதானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனர்.சாலை மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.