Published : 16 Mar 2021 06:18 PM
Last Updated : 16 Mar 2021 06:18 PM

ஸ்டாலின் இப்போதே முதல்வர் ஆனதாகக் கனவு காண்கிறார்; திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல் இது: முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

திருமயம்

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல்தான் இது என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

"திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகின்றபோது, திமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார். ஸ்டாலின் கனவு பலிக்காது. அவர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் திரைப்பட ஹீரோ போல இரண்டு பக்கமும் லைட் போட்டுக் கொண்டு நடந்து வருகிறார், அவர் ஹீரோ அல்ல ஜீரோ. மக்களிடத்தில் ஜீரோதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இனி மக்கள் திமுகவை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அவர்கள் இந்த முறை விழித்துக் கொண்டார்கள். உங்களுடைய தில்லுமுல்லைத் தெரிந்து கொண்டார்கள். உங்களின் வேடமும் நாடகமும் இனி மக்களிடம் எடுபடாது. வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக தலைமையிலான கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி, இந்தக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி தொடரும்.

ஸ்டாலின் இப்போதே முதல்வர் ஆனதாகக் கனவு காண்கிறார். இப்போதுதான் வேட்புமனுவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி வாக்குப் பதிவு நடைபெற வேண்டும், வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அப்படி வாக்குகள் எண்ணப்படும்போது அதிமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஏன் என்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். அந்த இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது, மக்கள் தான் வாரிசுதாரர்கள். அந்தத் தலைவர்கள் தமிழ்நாடு ஏற்றம் பெற நல்ல பல திட்டங்களைத் தந்தார்கள். அதேவழியில் தமிழக அரசும் செயல்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கலைப்பதற்கும், கட்சியை உடைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவை அனைத்தும் பொது மக்களின் ஆதரவோடும், அதிமுக தொண்டர்களின் ஆதரவோடும் தவிடுபொடியாக்கப்பட்டது. திமுகவுக்கு கொஞ்சம் கூட நல்ல எண்ணம் கிடையாது. அவர்கள் நேர்மையாக மக்களை சந்தித்து ஆட்சிக்கு வராமல், கட்சியை உடைத்து குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள்.

நாட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், வீட்டு மக்களை மட்டுமே பற்றிச் சிந்திக்கும் கட்சி திமுக. திமுகவில் வாரிசு அரசியல்தான் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின், என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார். உதயநிதி ஸ்டாலினும் நானும் அரசியலுக்கு வர மாட்டேன், என்னுடைய அப்பா சொல்லிவிட்டார் என்று கூறினார். இரண்டு பேரும் பச்சை பொய் பேசுகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை ஸ்டாலின் மாற்றிப் பேசுகிறார். நீங்களும் உங்கள் குடும்பமும் மட்டும் தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி முதல்வராக கையெழுத்து போட்டால் செல்லாதா? ஆனால், அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எவரும் முதல்வர் ஆகலாம். திமுகவில் குடும்ப வாரிசுகள் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல்தான் இது. தப்பித்தவறி திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டால் நாடு அவ்வளவு தான்.

திமுக ரவுடி கட்சி. நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

கரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் கொடுத்தோம். உதவித்தொகை கொடுத்தோம். எல்லாவற்றையும் மக்களுக்காக கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தைப் பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கினோம். இந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டதால் பொதுமக்களில் இன்னல்களை குறைக்க ரூ.2,500 வழங்கினோம், கடந்த தைப் பொங்கலுக்கு ரூ.1,000, கரோனா காலத்தில் ரூ.1000, இந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு ரூ.2,500 ஆக கடந்த தைப் பொங்கல் முதல் இந்த ஆண்டு தைப் பொங்கல் வரை ரூ.4,500 வழங்கிய அரசு அதிமுக அரசு. திமுக ஆட்சியில் கொடுத்தார்களா?".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x