Last Updated : 16 Mar, 2021 05:47 PM

 

Published : 16 Mar 2021 05:47 PM
Last Updated : 16 Mar 2021 05:47 PM

மதுரை வடக்கு தொகுதியில் திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள்: பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் நம்பிக்கை

மதுரை

மதுரை வடக்கு தொகுதியில் திமுகவினரும் எனக்கு வாக்களிப்பார்கள் என பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவாக 2 ஆண்டுகள் இருந்தேன். முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

இதை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தினேன். அதன்பிறகு திமுகவில் சின்ன சின்ன நெருடல்கள் ஏற்பட்டன. அது இப்போது வெடித்துள்ளது.

பாஜகவில் நான் முன்கூட்டியே பேசி வந்ததாக திமுகவினர் பொய் சொல்கின்றனர். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். சிறப்பான சட்டப்பேரவை உறுப்பினராக பெயர் வாங்கியுள்ளேன். பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறேன். மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். இதனால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

பாஜகவில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைவரும் ஒன்றாகவே பணிபுரிந்து வருகிறோம். திமுகவில் உள்ள என் ஆதரவாளர்களும் விரைவில் பாஜகவில் இணைவார்கள். நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அதிமுகவினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திமுகவினரும் எனக்கு வாக்களிப்பாளர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரிய தோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மாநில பொதுச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக என் பெயரும், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சசீந்திரன் உட்பட பலர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கட்சி யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கலாம். அதை கேள்வி கேட்க முடியாது. கட்சி ஒரு முடிவெடுத்தால் அதை ஏற்று செயல்படுவது எங்களின் கடமை.

கட்சி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து டாக்டர் சரவணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த 50, 60 பேர் 5 நிமிடங்கள் மட்டும் தேர்தல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

சரவணன் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே மாநிலத் தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் என்னிடம் பேசி சம்மதம் பெற்றனர். இதனால் எங்களிடம் பிரச்சினை இல்லை. மதுரை வடக்கில் சரவணன் வெற்றிபெறுவார் என்றார்.

மாநில பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம், நகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர்கள் ஹரிகரன், கராத்தேராஜா, முன்னாள் தலைவர் சசிராமன், கார்த்திக்பிரபு, சங்கரபாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x