

தொகுதி வாரியாக தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை, மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள், மனுதாரரான திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கரோனா பாதித்தவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம்எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தனிப் பட்டியலை வழங்க வேண்டும்.
அப்போதுதான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன்கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும்” என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், “தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின் பரிசீலிக்கப்பட்டு, வழங்கப்படும். மார்ச் 29-ம் தேதி இந்தப் பட்டியல் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தொகுதி வாரியாக தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை, மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள், மனுதாரரான திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.