

திருப்பூர் பனியன், ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான நூல் கிடைக்காமல், தொழில் முடங்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கை:
"திருப்பூர் பனியன் மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் பெருமளவு அன்னிய செலவாணியை ஈட்டித்தருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் வேலை தேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பையும், ஊதியத்தையும் வழங்குவதாக இத்தொழில் விளங்கி வருகிறது.
ஆனால், கடுமையான நூல் விலை ஏற்றத்தால் தொழில் நடத்த இயலாத அளவுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் போதிய அளவு பருத்தி உற்பத்தியாகிறது. ஆனால், விவசாயிகளிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு பருத்தியை பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, மிக அதிக விலைக்கு பஞ்சை விற்பனை செய்கின்றன.
இந்த செயற்கையான விலையேற்றத்துக்கு மத்திய அரசின் நாசகரமான, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகள் துணை நிற்கின்றன. நூலையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது. இதனால் கார்ப்பரேட்டுகள் ஏற்றுமதி மூலம் கொள்ளை லாபம் அடைகின்றன.
அதே சமயத்தில், உள்நாட்டில் நூல் விலை செங்குத்தாக உயர்வதோடு மட்டுமின்றி, நூல் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதன் விளைவாக, திருப்பூர் பனியன், ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான நூல் கிடைக்காமல், தொழில் முடங்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி, மாநில அரசு அக்கறையற்ற நிலையை மேற்கொள்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பனியன் தொழிலாளர்களும், தொழில் முனைவோரும் இணைந்து மார்ச் 15-ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தி கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. திருப்பூர் பனியன் தொழிலைப் பாதுகாக்க, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, மத்திய, மாநில அரசுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.