

ஜெயலலிதாவின் ஆட்சியைத் தருவோம் என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது, ஊழல் ஆட்சி தான் நாங்கள் செய்வோம் என்பதைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா அறிமுகக் கூட்டம் இன்று அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வநம்பி உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
தொடர்ந்து, வேட்பாளர் கு.சின்னப்பாவை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, ''எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தருவோம் எனக் கூறி வருகிறார். தற்போது வாக்கும் சேகரித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் சென்றவர்தான் ஜெயலலிதா. அப்படியானால் ஊழல் ஆட்சியைத் தான் எடப்பாடி பழனிசாமி தருவார் என நினைக்கிறேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நீட் தேர்வைத் தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டியை அனுமதிக்கவில்லை. சுயாட்சியை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் நீட், ஜிஎஸ்டியை பழனிசாமி அனுமதித்துள்ளார். அப்படி இருக்கையில் ஜெயலலிதா ஆட்சியை இவர் எப்படித் தர முடியும்?
சர்காரியா கமிஷனில் கலைஞர் ஊழல் செய்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பழனிசாமி தெரிவித்தார். நானும் சர்காரியா கமிஷனை முழுமையாகப் படித்துள்ளேன். அதில் அப்படி ஒரு வாசகம் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கம் தாருங்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்கிறார் மோடி ஆட்சியை வீழ்த்திவிட்டு, தமிழகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினைக் கொண்டு வந்து பிரதமராக்கலாம் என்கிறார். அப்படியான நம்பிக்கையானவர் ஸ்டாலின். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுகவை ஊழல் கட்சி எனச் சொல்கிறார்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படலாம்.
மு.க.ஸ்டாலின் கரோனா நிதியாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனக் கூறியதால்தான் எடப்பாடி பழனிசாமி ரூ.2,500 வழங்கினார். அதேபோல், கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீதம் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கூறியதால்தான் 7.5 சதவீதம் வழங்கினார்.
விவசாயக் கடனை ரத்து செய்யக் கூறியபோது, உயர் நீதிமன்றத்தில் போதிய நிதியில்லை எனக் கூறியவர் பழனிசாமி, ஸ்டாலின் கூறியதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். ஊழல் ஆட்சியினைத் தூக்கி எறிய திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.