Published : 16 Mar 2021 11:22 AM
Last Updated : 16 Mar 2021 11:22 AM

ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்

கு.சின்னதுரை: கோப்புப்படம்

சென்னை

ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலினை மாற்றி, அத்தொகுதியில் சின்னதுரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6 அன்று நடைபெறுகிறது. திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய முக்கியப் பணிகளை முடித்துள்ளன. அதன்படி, திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, சின்னதுரை போட்டியிடுவார் என, திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 16 ) வெளியிட்ட அறிவிப்பில், "சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து இந்த வேட்பாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக, ஏ.பி.ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x