Published : 16 Mar 2021 10:52 AM
Last Updated : 16 Mar 2021 10:52 AM

துரைமுருகனின் சொத்து மதிப்பு ரூ.29.62 கோடி: நிலுவையில் 8 கிரிமினல் வழக்குகள் 

வேலூர் 

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.29.62 கோடி என்று தெரியவந்துள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பத்தாவது முறையாகப் போட்டியிடும் நிலையில் அவர் நேற்று (மார்ச் 15) மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி, துரைமுருகன் கையிருப்பில் ரூ.20 லட்சத்து 36 ஆயிரத்து 65 தொகையும், அவரது மனைவி சாந்தகுமாரி கையிருப்பில் ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 702 தொகையும் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி அந்தக் கணக்கில் இருந்துதான் தேர்தல் தொடர்பான செலவுகளைச் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காட்பாடி இந்தியன் வங்கிக் கிளையில் துரைமுருகன் கணக்குத் தொடங்கியுள்ள நிலையில் அதில் தேர்தல் செலவுத் தொகையாக ரூ.30 லட்சத்து 74 ஆயிர்தது 622 தொகையை இருப்பு வைத்துள்ளார்.

துரைமுருகன் வசம் 500 கிராம் தங்கம், ஒரு காரட் வைரமும், மனைவி சாந்தகுமாரி வசம் 2,224 கிராம் தங்கம், 5.5 காரட் வைரமும் உள்ளது. துரைமுருகன் வசம் ஒரு ஃபார்ச்சூன் கார் மட்டும் உள்ளது. இருவருக்கும் கடன் நிலுவை எதுவும் இல்லாத நிலையில், துரைமுருகன் ரூ.86 லட்சத்து 12 ஆயிரத்து 782 தொகையையும், சாந்தகுமாரி ரூ.1 கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் தொகையையும் மற்ற நபர்களுக்குக் கடனாகக் கொடுத்துள்ளனர்.

துரைமுருகன் வசம் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.2 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆகவும், அசையா சொத்துகளின் மதிப்பாக ரூ.7 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்து 755 என மொத்தம் 9 கோடியே 59 லட்சத்து 41 ஆயிரத்து 170 ரூபாய் உள்ளது. இவரது மனைவி சாந்தகுமாரி வசம் அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.20 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 712 உள்ளது. இருவர் வசமும் மொத்தம் ரூ.29 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 882-க்கு சொத்து உள்ளது.

துரைமுருகன் மீது 8 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 6 வழக்குகள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் தொடர்பானதாகவும், 2 வழக்குகள் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையால் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் நிலுவையில் உள்ளன.

2016-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் போட்டியிட்டபோது துரைமுருகன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தின்படி அவர் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி வசம் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு மொத்தம் ரூ.29 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரத்து 701 இருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டில் துரைமுருகன் வசம் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.57 லட்சத்து 8 ஆயிரத்து 425 ஆக இருந்தது. தற்போது, அது ரூ.2 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்கள்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு முகநூல், அவரது பெயரில் தனி இணையதளம், ட்விட்டர் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் தனி முகவரி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x