தமிழகத்தின் ரோல் மாடலாக இருக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: தொகுதி வாக்காளர்களிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தின் ரோல் மாடலாக இருக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: தொகுதி வாக்காளர்களிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்
Updated on
2 min read

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல்வர் தொகுதி என்ற நிலைப்பாட்டைக் கொடுங்கள் என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி வலியுறுத்திப் பேசினார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார் .

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி, பெரிய சோரகை கிராமத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அருகில் உள்ள வீடுகளுக்கு நடந்து சென்று, மக்களிடம் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டும், ஆரத்தி எடுத்தும், மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு வாக்காளர் ஒருவரின் பெண் குழந்தைக்கு சுபணா ஸ்ரீ என்று முதல்வர் பெயர் சூட்டினார்.

தொடர்ந்து நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரும் கூட்டமாகத் திரண்டிருந்த மக்களிடையே, திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''தமிழகத்தில் உள்ள 17 ஆயிரத்து 662 வருவாய் கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தில் இணைய வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டால் மக்கள் வெளிநாடுகளுக்கும் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும்.

ஆட்சியில் இருக்கும்போது மக்களைச் சந்திக்காத ஸ்டாலின், இப்போது திண்ணையில் பெட்ஷீட் போட்டு மக்கள் குறைகளைத் தீர்க்கப் போவதாகப் பேசுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல மக்கள் இப்போது இல்லை. அவர்கள் விஞ்ஞான அறிவோடு இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி வெற்றி பெற முடியாது. ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என்று பேசுகிறார்.

ஸ்டாலின் அவர்களே, முதலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள். திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல, மாயத் தோற்றத்தை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார். 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்ட அதே நிலைதான் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்கு ஏற்படும். எந்தக் காலத்திலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. திமுகவைச் சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. அதனைத் தட்டிக் கேட்காத ஸ்டாலின், எங்கள் அரசு மீது ஊழல் புகார் கூறுகிறார்.

நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். நூல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டு, சரியான விலையில் நூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். எடப்பாடி தொகுதிக்கு முதல்வர் தொகுதி என்ற நிலைப்பாட்டைக் கொடுங்கள். எடப்பாடி தொகுதி தமிழகத்தின் ரோல் மாடலாக இருப்பதற்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

உங்கள் அனைவரின் உயிர் முக்கியம். எனவே, மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். சிறப்பாக இருக்கிறேன். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in