

திட்டக்குடி தனித் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இரு தினங்களிலேயே அத்தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிட முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறார் தமிழழகன்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த கா.தமிழழகன், விஜயகாந்தின் தீவிர ரசிகர். 2005-ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டபோது, கிளைக் கழகப் பொறுப்பில் இருந்தவர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு நல்லூர் ஒன்றியத் துணைத் தலைவராகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 2011-ல் திட்டக்குடி தனித் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர் தேமுதிக உட்கட்சிப் பூசலில் சிக்கியவர், அதிமுகவுக்கு ஆதரவு எம்எல்ஏவாக மாறி, தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவாக நீடித்தார்.
2016-ல் அதிமுகவில் இணைந்து அப்போதைய தேர்தலில் வாய்ப்பு கேட்டார். இருப்பினும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்திருந்த நிலையில், திட்டக்குடி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த தமிழழகன், கடந்த 11-ம் தேதி அமமுக பொதுச்செயலாளர் தினகரனைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த மறுநாளே திட்டக்குடி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி அமமுக- தேமுதிக கூட்டணியில் திட்டக்குடி ஒதுக்கப்பட்டு, ஆர்.உமாநாத் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 11-ம் தேதி புதிய கட்சியில் இணைந்த மறுநாள் வேட்பாளர், வேட்பாளரான இரு தினங்களில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போன்ற காரணங்களால் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். தாய்க் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதா, மீண்டும் அதிமுகவிற்குச் செல்வதா அல்லது அமமுகவிலேயே தொடர்வதா என்ற சிக்கலுக்கு ஆளாகியுள்ளார் தமிழழகன்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''அமமுகவில் இணைந்துவிட்டேன். கட்சி என்ன சொல்கிறதோ அதை ஏற்றுச் செயல்படுவேன்'' என்று தெரிவித்தார்.