

ஏபிபி, சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தற்போதுள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி எதிரெதிர் திசையில் நிற்கிறது. அதற்கு அடுத்து 3-வது அணியாக கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. சமீப நாட்களில் அமமுக, தேமுதிகவுடன் இணைந்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பில் முன்னிலை பெற முயல்கிறது.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் திமுக அணிக்குச் சாதகமாக இருக்கும் எனப் பலரும் கூறிவரும் நிலையில் ஏபிபி-சி வோட்டர்ஸ் என்கிற தனியார் அமைப்பு தேர்தலுக்கு முன் மக்களின் மனநிலை குறித்து 5 மாநிலங்களிலும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவதற்கு 40% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி முதல்வராவதற்கு 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் சேகரித்த தகவலில் தற்போதுள்ள அதிமுக அரசு மீது 48% சதவீத மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போதுள்ள அதிமுக-பாஜக-பாமக-தமாகா கூட்டணி மொத்தமாக 30.6% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் 53 முதல் 61 சீட்டுகள் வரை வெல்லவே வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 வரையிலான சீட்டுகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று திமுக, அதிமுக கூட்டணியைத் தவிர்த்து மக்கள் நீதி மய்யம் 7% வாக்குகளைப் பெறலாம். அதன் மூலம் 2 முதல் 6 சீட்டுகளை வெல்லும் எனவும், அமமுக 6.4% வாக்குகளைப் பெறலாம். அதன் மூலம் 1 முதல் 5 வரை சீட்டுகளை வெல்லும் எனவும், மற்றவர்கள் 12.3% வாக்குகளைப் பெற்று 3 முதல் 7 சீட்டுகளை வெல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் வாக்காளர்களில் 32.8% முக்கிய அம்சமாகச் சொல்வது வேலையின்மை. 11.6% பேர் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினையையும், 10.4% பேர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் முக்கியப் பிரச்சினையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.