

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மூச்சுப் பயிற்சி முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஒரு வார காலமாக ஈஷா யோகா மையத்தில் தியானப் பயிற்சியில் ஈடுபட்டது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு களி, தினை போன்ற பாரம்பரிய உணவுகளை கொடுத்தார்கள். மிகவும் நன்றாக இருந்தது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 28 அமைச்சர்கள் பணியாற்றி னார்கள். ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு முக்கியத்தும் தரப்படவில்லை. அதனால்தான் வெறும் 5 அமைச்சர்கள் சென்றுள்ளனர். விரை வில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளேன்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களிடத்தில் சகிப்புத்தன்மை இல்லை. 100 ரூபாய் திருடினால் திருடன், 1,000 கோடி திருடினால் தலைவன் என்ற நிலை தற்போது உள்ளது என்றார்.
மக்கள் நலக் கூட்டணிக்கு, தேமுதிக வுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்டபோது, மக்கள் நலக் கூட்டணிக்கு அழைத்துள்ளதற்கு வைகோ வுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். பேட்டியின்போது அவரது மனைவி பிரேமலதா உடன் இருந்தார்.