

தென்னிந்தியாவில் காங்கிரஸின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுவது புதுச்சேரி. ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதை அசைத்துப் பார்த்தாலும், காங்கிரஸ் கட்சி மீண்டு எழுந்து கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி காங்கிரஸ் முதல்வரானார். முதல்வர் பதவிக்காக காத்திருந்த நமச்சிவாயம் கடும் அதிருப்தியில் இருந்தார். மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட அவர் பாஜகவுக்கு சென்றுவிட்டார். அடுத்தடுத்து பலர் எதிர் முகாம் செல்ல ஆட்சி கவிழ்ந்தது.
அமைச்சர் பதவியைத் துறந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், ஏனாம் பகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவு தந்து, காங்கிரஸில் இருந்து பலரையும் இழுக்கத் தொடங்கியுள்ளார்.
காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டாரத் தலைவர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் தொடங்கி பலர் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
தங்கள் கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதைத் தடுக்க, காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் மாநில பட்டியலை வெளியிட்டது. கடந்த காலத்தில் 40 பேர் மட்டுமே அதிகபட்சமாக மாநில நிர்வாகிகளாக இருந்தனர். பிளவைத் தடுக்க 90 மாநில நிர்வாகிகளை காங்கிரஸ் நியமித்தது. ஆனாலும், கட்சிக்குள் அதிருப்தியே நிலவுகிறது.
திமுகவுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ் கடந்த தேர்தலில் 21 தொகுதிகளைப் பெற்றது. இம்முறை 15 தொகுதிகளையே பெற்றிருக்கிறது. இதை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர். நாள்தோறும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
“கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் பலனில்லை. தற்போதும் கட்சிக்கும் பலனில்லாத சூழலை உருவாக்கி விட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தங்களுக்கு தொகுதி ஒதுக்காவிட்டால், தனித்து 4 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளது. கட்சி நிர்வாகிகளின் அதிருப்தி, தொண்டர்களின் எதிர்ப்பு, கூட்டணிக் கட்சிகளின் குற்றச்சாட்டு என பல்முனை தாக்குதலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி திக்கித் திணறி வருகிறார்.