

திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்து அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை என வெளியிடப்பட்டுள்ளது என திருவாரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினர். அதையொட்டி, திருவாரூரில் தெற்கு வீதியில், திமுக வேட்பாளர்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டிஆர்பி.ராஜா, நன்னிலம் ஜோதிராமன், திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் க.மாரிமுத்து ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி நேற்றைய பிரச்சாரத்தில், ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் மறைந்த தலைவர் கருணாநிதியும், நானும் தான் என கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், இதுவரை என்னவென்று தெரியவில்லை. விசாரணைக் கமிஷனுக்கு ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. அதனால்தான் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவது நமது கடமை என்கின்றோம். யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்து அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை என வெளியிடப்பட்டுள்ளது. திமுக சார்பில் மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமைத் தொகை என அறிவித்ததை ரூ.1500 என்று கூறியுள்ளனர். முதியோர் உதவித்தொகை ரூ.1500 என்பதை ரூ.2 ஆயிரம் என அறிவித்துள்ளனர். கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வோம் என்றோம். அதையும் அறிவித்து விட்டார்கள்.
4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது இதையெல்லாம் நீங்கள் ஏன் செய்யவில்லை? விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக் கோரி நாங்கள் பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தியும் நீங்கள் செய்யவில்லை. இப்போது தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி என அறிவிக்கிறார்கள். இது சாகும் நேரத்தில் 'சங்கரா சங்கரா' என்று கூறுவதைப் போல உள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று திமுக தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அப்போது இதே தெருவில் இதே வீதியில் வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். இப்போது, இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, இதே தெருவில் வெற்றி விழா கூட்டத்தில் நான் பங்கேற்க நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.