Published : 19 Nov 2015 08:18 AM
Last Updated : 19 Nov 2015 08:18 AM

தேசிய நீர்வழிப் பாதை மூலம் நதி நீர் இணைப்பு குறித்த மாநாடு: சென்னை வி.ஐ.டி. பல்கலை. வளாகத்தில் நாளை தொடங்குகிறது

தேசிய நீர்வழிப் பாதை அமைப்பதன் மூலம் நதிகளை இணைப்பது குறித்த மாநாடு சென்னையில் நாளை தொடங்குகிறது.

சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலை யில் அமைந்துள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். பல்கலை.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகிக்கிறார்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகமும், நவாட் டெக் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு மாற்றாக தேசிய நீர்வழிப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம், அதன் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

தேசிய நீர்வழிப் பாதையின் முக்கியத்துவம் குறித்து நவாட் டெக் அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் உரையாற்றுகிறார்.

இந்த 2 நாள் மாநாட்டில் நீர் மேலாண்மை, விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு அமர்வுகளும், விவாதங்களும் நடைபெறுகின்றன.

அரசியல் அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி., தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மதிமுகவைச் சேர்ந்த செந்திலதிபன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இவர்களைத் தவிர தமிழ்நாடு பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், தெலுங்கானா மாநில முதன்மைச் செயலாளர் எஸ்.கே.ஜோஷி, ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் ஆதித்ய நாத் தாஸ், மத்திய நீர்வளத் துறை கூடுதல் செயலாளர் அமர்ஜித் சிங், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் வெவ்வேறு அமர்வுகளில் உரை நிகழ்த்துகிறார்கள்.

மேலும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் உள்ளிட்ட நிபுணர்களும் மாநாட்டில் பேசுகின்றனர். நிறைவாக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா சனிக்கிழமையன்று மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பருவமழைக் காலங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டு கடலில் கலக்கும் வெள்ள நீரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து இந்த தேசிய நீர்வழிப் பாதை மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x