

ஆக்ராவில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட கள்ள ரூபாய்நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளநோட்டு கும்பல் தமிழகத்தின் பிற பகுதிகளில் பதுங்கி உள்ளதா என தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை சின்ன நெய்க்காரன் தெருவில் கடந்த 13-ம் தேதி இரவு யானைக்கவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை சோதனை செய்ததில் கள்ள ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.4 லட்சம் கள்ள நோட்டு
அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 7,800 ரூபாய்க்கான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸாரின் விசாரணையில் அவர்கள் பட்டாளத்தை சேர்ந்த விமல்குமார் டங்கா (30), மூலக்கடை எருக்கஞ்சேரியை சேர்ந்த சேட்டன் பட்டேல் (25), எம்கேபி நகரை சேர்ந்த செல்லாராம் (45) என்பது தெரியவந்தது.
இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவர்களின் கூட்டாளிகள் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் கள்ளநோட்டு கும்பல் பதுங்கி உள்ளதா என தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.