

பாதுகாப்பு, சேமிப்பு என்ற இரண்டையும் வழங்கக்கூடிய ‘பச்சாத்பிளஸ்’ என்ற புதிய பாலிசியை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பங்குச்சந்தை சாராத, லாபத்தில் பங்கு பெறும், தனி நபர் சேமிப்புத் திட்டமான ‘பச்சாத் பிளஸ்’ என்ற பாலிசியை எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது. இது பாதுகாப்பு, சேமிப்பு என்ற 2 அம்சங்களையும் வழங்குகிறது.
பாலிசி முதிர்வு அடையும்போது, காப்பீட்டுத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களிடம் வழங்கப்படும். பாலிசி முதிர்வு அடையும் தேதிக்கு முன்பாக, பாலிசிதாரர் மறைந்தால், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும்.
‘பச்சாத் பிளஸ்’ பாலிசிக்கான குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். இதில் உச்சவரம்பு எதுவும் இல்லை. பாலிசிதாரர்கள் தங்களது தேவை மற்றும் வசதிக்கேற்ப அதிகபட்சமாக எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யலாம்.
பிரீமியத் தொகையை ஒரே தவணையிலோ, 5 ஆண்டுகள் வரையிலோ செலுத்தும் வசதி உள்ளது. இந்த பாலிசி திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதியான, எளிமையான நடைமுறைகள் ‘பச்சாத் பிளஸ்’ பாலிசி திட்டத்தில் உள்ளன.
எல்ஐசி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.licindia.com) ஆன்லைன் மூலமாகவோ, முகவர்கள் அல்லது முகமை நிறுவனங்கள் வாயிலாக நேரடியாகவோ இந்த பாலிசியை பெறலாம். ‘பச்சாத் பிளஸ்’ பாலிசி பற்றிய கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளம் அல்லது முகவர்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது