

கல்விக்கட்டண நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.ஆறுமுகம் சென்னை டிபிஐ வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கரோனா தொற்றால் 9 முதல் 11-ம் வகுப்புவரைபயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் எல்கேஜி முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு (2020-21) சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டண தொகையை ஏப்ரல் மாதத்துக்குள் வழங்க வேண்டும்.
அதேபோல், 2011-ம் ஆண்டுக்குமுன் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு நகர்ப்புற அனுமதி வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றவேண்டும். விரும்பும் மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்க ஏதுவாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பை தொடர்ந்து நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
எங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமான இத்தகைய கோரிக்கைகள் அடங்கி மனுவை தனியார் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமியிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது கூட்டமைப்பின் செயலாளர் எம்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.