

காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் 140 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, நேற்று கப்பல் கட்டும் தளம் முன்பு ஆர்ப்பாட்டம், படகுகள் மூலம் கடல் பகுதியில் முற்றுகை என மீனவ மக்கள் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் தளம் செயல்படுகிறது. இந்த தளத்துக்காக கடந்த 2008-ம் ஆண்டு காட்டுப்பள்ளி குப்பம் மீனவ மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 2 கி.மீ. தூரத்தில் மாற்று இடம் அளிக்கப்பட்டு, குடியமர்த்தப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், காட்டுப்பள்ளி குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒருவருக்கு வேலை என்று ஒப்பந்தம் போடப்பட்டு, கப்பல் கட்டும் தளத்தில் 140 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். அவ்வாறு பணியமர்த்தப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், 11 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் 140 பேரை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று கப்பல் கட்டும் தளம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என காட்டுப்பள்ளி குப்பம் மீனவ மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், 20-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள், கடல் பகுதியில் கப்பல் கட்டும் தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் மற்றும் தனியார் கப்பல் கட்டும் தள அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ``தற்போதைக்கு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. ஆனால், ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் நிர்வாகத்திடம் பேசி உரிய தீர்வு காணப்படும்’’ என தனியார் கப்பல் கட்டும் தள அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, 8 மணி நேரத்துக்கு மேல் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.