Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

அரசு பேருந்துகளின் குறைகள் தொடர்பாக இ-மெயில், வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்: உடனுக்குடன் சரிசெய்வதால் பயணிகள் வரவேற்பு

சென்னை

அரசு பேருந்துகள் தொடர்பான நிறை, குறைகள், புகார்களை இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் பெற்று, உடனுக்குடன் சரிசெய்யும் திட்டத்தை அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 1.87 கோடி பேர் பயணம் செய்து வந்தனர்.

இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2020 செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு பேருந்துகளின் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், கரோனாவுக்கு முன்பு கிடைத்த அளவுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இன்னும் வசூல் கிடைக்கவில்லை.

கட்டணத்தை உயர்த்தாமல், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வசூலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை போக்குவரத்து கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன. பயணிகளின் புகார்களை உடனுக்குடன் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நிறை, குறை இருந்தால் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக அந்தந்த அரசு போக்குவரத்து கழகத்தின் இ-மெயில் முகவரி, வாட்ஸ்அப் எண்ணுடன் (உதாரணத்துக்கு: tvmtnstc@gmail.com மற்றும் tnstctvm@yahoo.in, 9445456040) பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி கேட்டபோது, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வருவாயை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அரசு பேருந்துகள் தொடர்பான நிறை, குறைகளை செல்போன், இ-மெயில் மூலம் தெரிவிக்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளோம். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. பயணிகளிடம் மரியாதையின்றி பேசுவது, சரியான சில்லறை திருப்பித் தராதது, நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, அதிவிரைவு பேருந்துகளை அனைத்து இடங்களிலும் நிறுத்துவது, செல்போனில் பேசிக்கொண்டோ, அதிக வேகத்திலோ பேருந்தை இயக்குவது, பேருந்துகளில் இருந்து குப்பைகள் அகற்றப்படாதது தொடர்பாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். அதில் 80 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து பயணிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x