புதுப்பட்டினம் புறவழிச் சாலையில் தொடர் விபத்துகள்: ஒருவழிப் பாதையாக மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

புதுப்பட்டினம் புறவழிச் சாலையில் தொடர் விபத்துகள்: ஒருவழிப் பாதையாக மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
Updated on
1 min read

புதுப்பட்டினம் புறவழிச்சாலையில் பழைய விஏஓ அலுவலகம் அருகே நடைபெற்று வரும் குழாய் சீரமைப்பு பணிகளால், அப்பகுதியில் தொடர் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால், சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை இச்சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகேயுள்ள இளையனார் குப்பம் மற்றும் புதுப்பட்டினம் பகுதியின் இடையே அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதனால், வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரூ.23.85 கோடி மதிப்பில் 1.7 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுப்பட்டினம், பழைய கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள புறவழிச் சாலையில் பல்வேறு மார்க்கமாக வரும் சாலைகள் இணையும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கல்பாக்கம் நகரியப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் சாலையின்கீழ் புதைக்கப்பட்டுள்ளன.

இக்குழாய்கள் சேதமடைந்து அவ்வப்போது தண்ணீர் கசிவு ஏற்படுவதால், குறிப்பிட்ட அப்பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியைக் கடக்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றன.

இந்நிலையில், தண்ணீர் கசிவால் சேதமடைந்துள்ள புதுச்சேரி - சென்னை சாலையில், விபத்துகளைத் தடுக்க தடுப்புகள் அமைத்து குறிப்பிட்ட பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் தொடர் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால், குழாய் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை, வாகன விபத்துகளைத் தடுக்க புறவழிச்சாலையை முழுவதுமாக ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, புதுப்பட்டினம் வணிகர் சங்க துணைத் தலைவர் அப்துல் உசேன் கூறியதாவது: புறவழிச் சாலையில் தினந்தோறும் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதனால், குழாய் சீரமைப்பு பணிகள் முடியும் வரை, தற்காலிகமாக புறவழிச்சாலையை புதுச்சேரி-சென்னை செல்லும் சாலையாகவும் மற்றும் புதுப்பட்டினம் நகருக்குள் அமைந்துள்ள பழைய ஈசிஆர் சாலையை சென்னை-புதுச்சேரி செல்லும் சாலையாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம், வாகன விபத்துகள் ஏற்படுவது முற்றிலும் குறையும்.

அதனால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு மேற்கண்ட சாலையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in