Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

சென்னையில் ஆயிரம்விளக்கு தவிர 15 தொகுதிகளிலும் 66 பேர் வேட்புமனு தாக்கல்: முக்கிய கட்சிகள் உட்பட சுயேச்சைகளும் மனு அளித்தனர்

சென்னை

சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி தவிர மீதமுள்ள 15 தொகுதிகளில் நேற்று வரை 66 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 12-ம்தேதி தொடங்கியது. முதல் நாளில்சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 6 பேர் மனு செய்தனர்.

இந்நிலையில் வளர்பிறை முகூர்த்த நாளான நேற்று அதிகமானவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். மாலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதி தவிர மீதமுள்ள15 தொகுதிகளில் மொத்தம் 66மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதிகபட்சமாக ஆர்.கே.நகரில் 14 மனுக்கள் தாக்கலாகி இருந்தன.

இதில், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுயேச்சை உட்பட 6 பேரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் திமுக தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுத்தாக்கல் முடிந்து வெளியில் வந்த உதயநிதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை உறுப்பினர் என்பது நியமனப்பதவி இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். வாரிசு அரசியல் செய்வதாக இருந்தால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் முடிவெடுக்கட்டும். திமுக உறுப்பினர்கள் என்பதால் அதிமுக அரசு தொகுதிக்கு தேவையானதை செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் செய்து தருவோம் என்று உறுதியளித்துள்ளோம்’’ என்றார்.

துறைமுகம் தொகுதியில், பகுஜன் சமாஜ் வேட்பாளர் சி.ரவிகுமார் உள்ளிட்ட 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உட்பட 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், அமமுக- லட்சுமிநரசிம்மன், நாம் தமிழர் கட்சி -மெர்லின் சுகந்தி உள்ளிட்ட 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.

எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் பெ.ஜான் பாண்டியன் மற்றும் நாம் தமிழர் சார்பில் பி.கீதாலட்சுமி ஆகியோர் மட்டும் வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். திருவிக நகர்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் ஜி.சுந்தர், ஏ.செல்வக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.அசோக், நாம் தமிழர் கட்சி - எம்.கீர்த்தனா மற்றும் பகுஜன் சமாஜ் - சி.வேலு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.சங்கர் காலையில் முதல் ஆளாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு இரண்டாவது நபராக எம்.கே.மோகனும் மூன்றாவது நபராகஎஸ்.கோகுல இந்திரா உட்பட 5 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அமமுகசார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழனும் மற்றும் 4 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

விருகம்பாக்கம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் விருகை என்.ரவி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன், சுயேச்சையாக திரைப்பட நடிகர் மயில்சாமி உட்பட 5 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பின்னர் மயில்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நான் எந்தக் கட்சிக்கும் விரோதி அல்ல. எம்ஜிஆரை நினைத்து தான் தேர்தலை முதல்முறையாக சந்திக்க உள்ளேன். எந்த ஒரு கட்சி தலைமையும் சரியில்லை’’ என்றார்.

இதேபோல் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் உட்பட 6 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மயிலாப்பூரில் 2 பேர் மனுதாக்கல் செய்தனர். தி.நகர் தொகுதியில் மக்களாட்சி கட்சியின் வேட்பாளர் திருநாநாவுக்கரசு நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர், பகுஜன் சமாஜ் வேட்பாளர் பழனிவேல், நாம் தமிழர்கட்சி - எல்.கோவிந்தராஜ் சுயேச்சைகள் எஸ். கந்தசாமி,ஏ.அஜித்குமார் உட்பட 6 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x