

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வரவேற்பு நிகழ்ச்சியை சிட்டிங் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ப.சிதம்பரம் ஆதரவாளரான சங்கராபுரம் முன்னாள் ஊராட்சித் தலை வர் மாங்குடியும், சிட்டிங் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளரான தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமியும் சீட் கேட்டனர். இதனால் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.
தேவகோட்டையில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வேலுச்சாமிக்கு சீட் கேட்டு அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் திருவாடானை தொகுதியை கே.ஆர்.ராமசாமி மகனுக்கு கொடுத்ததால் காரைக் குடியில் அவரது ஆதரவாளர் வேலுச்சாமிக்கு சீட் மறுக்கப்பட்டு மாங்குடி அறிவிக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து நேற்று காரைக்குடி வந்த மாங்குடிக்கு கோவிலூரில் காங்கிரஸார் வரவேற்பு அளித்தனர். ஆனால் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அதேநேரத்தில் வேலுச்சாமிக்கு சீட் கொடுக்காததற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.