Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM

தேர்தல் நடத்தை விதிமுறைகள் டி.என்.பி.எஸ்.சி-யை கட்டுப்படுத்தாது: விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் சட்டபூர்வ அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.யை கட்டுப்படுத்தாது. எனவே, பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அதற்கு தடை இல்லை என்று தமிழக தேர்தல் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 5-ம் தேதி வெளியிட்டது. அன்றே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடவும் அரசு நலத் திட்டங்களை தொடரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பிலுள்ள தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள் ஆகியவற்றை அரசு சம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து அப்புறப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நியமனங்களுக்குத் தடை

பள்ளி ஆசிரியர், கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது என்ப தால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்திக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்வு முடிவு மற்றும் இறுதி தேர்வுப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட முடியாது. கடந்த 11-ம் தேதி முதல் நடத்தவிருந்த உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வை சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளிவைத்துவிட்டது.

தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த வாரம் குரூப்-4 தேர்வு முடிவை வெளியிட்டது. அதில் ரேங்க் பட்டியல் இடம் பெற்றிருந்ததே தவிர, தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் படவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லையோ என்ற சந்தேகம் தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானத்திடம் கேட்டபோது, ‘‘தேர்தல் நடத்தை விதிகள், சட்டபூர்வ அமைப்புகளான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (யு.பி.எஸ்.சி.), பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்), டி.என்.பி.எஸ்.சி. ஆகிய தேர்வாணையங்களைக் கட்டுப்படுத்தாது.

எனவே, அந்த அமைப்புகள் பணி நியமனங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் தடை ஏதும் கிடையாது’’ என்றார்.

டி.என்.பி.எஸ்.சி.க்கு நடத்தை விதிகள் பொருந்தாது என்பதால், வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் குருப்-2 தேர்வு, குரூப்-1 மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x