முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்களிக்க ஆர்வம் இல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் 6% பேர் மட்டுமே விருப்பம் :

முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்களிக்க ஆர்வம் இல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் 6% பேர் மட்டுமே விருப்பம் :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஆர்வம் இல்லை. தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய இன்று (மார்ச் 16) கடைசி நாள் என்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 6 சதவீதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும்மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வரத் தேவையில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரில் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம்முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சம்பந்தப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குபோட விருப்பம் உள்ளதா, இல்லையா என்பதை கேட்டறிந்தனர். தபால் வாக்கு போட விரும்புகிறவர்களிடம் அதற்கான படிவம்12டி-ஐ கொடுத்து, பூர்த்தி செய்து பெற்றுக் கொள்கின்றனர்.

தபால் வாக்களிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மார்ச் 16 வரை 12டி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்ய இன்று (மார்ச் 16) கடைசி நாளாகும். ஆனால்,தபால் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் ஆர்வம் இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 29 ஆயிரம்பேர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 16 ஆயிரம் பேர் என மொத்தம்45 ஆயிரம் பேர் தபால் வாக்களிக்க தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர்.

ஆனால், நேற்று வரை 80 வயதுக்கு மேற்பட்ட 2,136 பேரும், மாற்றுத்திறனாளிகள் 665 பேரும்மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம்சமர்பித்துள்ளனர். இது வெறும்6.22 சதவீதம் மட்டுமே ஆகும்.பெரும்பாலானோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தபால் வாக்கில் ஏதேனும் தவறுகள் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இதனால் தபால் மூலம் வாக்களிக்க விரும்பவில்லை. வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்தால் தான் தேர்தலில் வாக்களித்த உணர்வு ஏற்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in