Published : 15 Mar 2021 07:19 PM
Last Updated : 15 Mar 2021 07:19 PM

அதிமுகவின் டிஜிட்டல் பிரச்சார உத்தி: முதல்முறை வாக்காளர்களிடம் செல்போனில் பேசும் மதுரை திருப்பரங்குன்றம் வேட்பாளர்

மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விவி.ராஜன் செல்லப்பா, தினமும் அந்த தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் செல்போனில் பேசி ஆதரவு திரட்டுகிறார்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இந்த பிரச்சார உத்தி, இளம் வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

கடந்த தேர்தல்களில் வாக்காளர்களைக் கவர சுவர் விளம்பரமும், சுவரொட்டிகளும் முக்கிய பங்கு வகித்தன. தற்போது செல்ஃபோன், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சார உத்தியை நவீன வடிவத்திற்கு மாறியுள்ளன.

‘ஐபேக்’ யோசனை அடிப்படையில் திமுக இந்த தேர்தலில் முழுமையாக டிஜிட்டல் வடிவிலான தேர்தல் பிரச்சாரத்திற்கு மாறியது. அது இந்த முறை வாக்காளர்களை பெரியளவில் ஈர்த்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்களும் அந்த நிறுவனத்தின் ஆலோசனையிலே தேர்தல் பிரச்சாரத்தையும், வியூகத்தையும் வடிவமைக்க உள்ளனர்.

திமுகவிற்கு போட்டியாக அதிமுகவும் தங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் டிஜிட்டர் வடிவ பிரச்சார யுக்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்டமாக அந்த பிரச்சார உத்தியை, மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் முறை வாக்காளர்களை பட்டில் தயார் செய்து அவர்கள் செல்போன் எண்களுக்கு வேட்பாளர் பேசும் ரிக்கார்டிங் ஆடியோ கால்களை அனுப்பி, அவர்களுக்கான சில வாக்குறுதிகளைக் கொடுத்து ஆதரவு திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இன்று முதல் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விவி.ராஜன் செல்லப்பா, முதல் முறை வாக்காளர்களை அவர்கள் செல்போன்களில் அழைத்து உருக்கமாகப் பேசி ஆதரவு திரட்டத்தொடங்கியுள்ளார். ராஜன் செல்லப்பா பேசும் செல்போன் அழைப்பு, திருப்பரங்குன்றம் தொகுதி முதல் முறை வாக்காளர்களிடம் பரவலாக செல்லத்தொடங்கியுள்ளது.

அதிமுக தகவல்தொழில்நுட்பபிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றம் தொகுதியில் 18,950 முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ளனர். இதுபோல், அனைத்துத் தொகுதிகளுக்கும் ‘பூத்’ வாரியாக பட்டியல் எடுத்துள்ளோம்.

முதல் தலைமுறை வாக்காளர்களான அவர்கள் என்ன படிக்கிறார்கள், எதிர்பார்ப்பு,கோரிக்கைகளை பெற்று அதை நிறைவேற்றும் வகையில் அவர்கள் வீட்டிற்கு கடிதம் அனுப்பி ஆதரவு திரட்டப்படுகிறது.

அவர்கள் செல்போன் எண்களில் அவர்களை அழைத்து வேட்பாளர்கள் அவர்களிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்து, வாக்களிக்க வேண்டுகோள் வைக்கும் ரிக்கார்டடு வாய்ஸ் கால் அனுப்பப்படுகிறது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x